காமராசர், சிறந்த பேச்சாளரும் நாடாளுமன்றவாதியும் ஆன சத்தியமூர்த்தியைத் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல் சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரானபோது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டுக் காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்குதான் தேசியக் கொடியை ஏற்றினார்.
1953-க்குப் பிறகு சக்ரவர்த்தி ராசாசிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம். காமராசர் ஆட்சித் தலைமைப் பொறுப்புக்கு வரத் தயங்கியதற்கு அவருக்கிருந்த மொழிவளம் குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு முக்கிய காரணம். (அப்போது தமிழகம் சென்னை ராச்சியமாக ஆந்திராவின்பெரும்பகுதி, கர்நாடகாவின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தது) குலக்கல்வித் திட்டத்தால் ராசாசியின் செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும் சுருங்கிப் போக, காங்கிரசின் உள்ளேயே ராசாசிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராசாசி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம. நானே விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய முக்கிய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த பின் வேலை செய்தார். அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான எம். பக்தவத்சலம்அதனை முன்மொழிந்தார். ஆனால் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராசர் பெருவாரியான வாக்குகள் முன்னணியில் வெற்றி பெற்றார். இதுதான், காமராசர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று பதவியேற்றதன் பின்னணி.
ராசாசி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27,000 ஆனது. 1920 இல் நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டமே 1960 களில் காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்டு எம். ஜி. ராமச்சந்திரனால் 1980 களில் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் முன்னோடியாகும். அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாகப் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. பள்ளிகளில் வேலைநாட்கள் 180 இல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டது. காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.